பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் சிறுமியை தொடர்ந்து மனைவியும் சாவு டிரைவர் மீது இரட்டை கொலை வழக்குப்பதிவு

தலைவாசல் அருகே பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியை தொடர்ந்து டேங்கர் லாரி டிரைவரின் மனைவியும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதையடுத்து டிரைவர் மீது இரட்டை கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-11-08 14:06 GMT
தலைவாசல், 

தலைவாசல் அருகே ஆறகளூர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் மருதமுத்து (வயது 42), டேங்கர் லாரி டிரைவர். இவருடைய மனைவி தெய்வானை (35). இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார்.

இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் மருதமுத்துவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த மாதம் 13-ந் தேதியும், அவர்கள் இருவரும் தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது ஆத்திரம் அடைந்த மருதமுத்து மனைவி மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்றார். இதில் பற்றி எரிந்த தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய தெய்வானை, அருகில் உள்ள மணிகண்டன் என்பவரின் வீட்டுக்குள் ஓடினார்.

சிறுமி பலி

அப்போது அங்கிருந்த மணிகண்டனின் மனைவி திவ்ய பிரியா, மகள் தனுஸ்ரீ (3) மீதும் தீப்பற்றி கொண்டது. இதில் தீயில் கருகி உயிருக்கு போராடிய அவர்கள் 3 பேரையும் உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் 3 பேரும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி தனுஸ்ரீ இறந்தார். அதே நேரத்தில் மணிகண்டனின் மனைவி திவ்ய பிரியா சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பினார்.

மனைவியும் சாவு

இந்த சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் மருதமுத்துவை கைது செய்து விசாரித்தனர். இதனிடையே நேற்று முன்தினம் மருதமுத்துவின் மனைவி தெய்வானையும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் லாரி டிரைவர் மருதமுத்து மீது இரட்டை கொலை வழக்குப்பதிவு செய்து தலைவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்