தம்மம்பட்டியில் விடிய, விடிய லஞ்ச ஒழிப்பு சோதனை: பத்திரப்பதிவு அலுவலர் மீது வழக்குப்பதிவு

தம்மம்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை விடிய, விடிய நடந்தது. தொடர்ந்து பத்திரப்பதிவு அலுவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-11-08 14:12 GMT
தம்மம்பட்டி,

தம்மம்பட்டியில் திருச்சி மெயின் ரோட்டில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பத்திரப்பதிவு அலுவலராக செந்தில்குமார் (வயது 35) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் அதிக அளவில் லஞ்சம் பெறுவதாகவும், புரோக்கர்கள் மூலம் இரவில் பணம் வசூலிப்பதாகவும் சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் சென்றது.

இதைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திர மவுலி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தம்மம்பட்டி பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதில் சிலர் தம்மம்பட்டி எல்லைப்பகுதியில் பத்திரப்பதிவு அலுவலர் காரை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் மாலை பத்திரப்பதிவு அலுவலர் செந்தில்குமார், அலுவலகத்தை பூட்டி விட்டு தனது காரில் புறப்பட்டார். இதைப்பார்த்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது காரை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர்.

வழக்குப்பதிவு

மேலும் காரில் இருந்த டிபன் பாக்சில் கணக்கில் வராத ரூ.40 ஆயிரம் இருந்தது. தொடர்ந்து பூட்டப்பட்டிருந்த பத்திரப்பதிவு அலுவலகத்தை கெங்கவல்லி மண்டல துணை தாசில்தார் காத்தமுத்து மற்றும் வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் திறந்து, அலுவலகத்துக்குள் லஞ்ச ஒழிப்பு போலீசார் புகுந்து சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை விடிய, விடிய நடந்தது. அப்போது கணக்கில் வராத மொத்தம் ரூ.42 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பத்திரப்பதிவு அலுவலர் செந்தில்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், பத்திரப்பதிவு அலுவலர் செந்தில்குமாரின் மீது வந்த புகாரை தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது காரில் டிபன் பாக்சில் இருந்த ரூ.40 ஆயிரம், அலுவலகத்தில் இருந்த ரூ.2 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணத்துக்கு, அவரிடம் கணக்கு இல்லை. தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பத்திரப்பதிவு துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்