அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்

அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்துள்ளார்.

Update: 2020-11-09 21:05 GMT
புதுச்சேரி, 

புதுவை அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் தங்களுக்கான நிலுவை சம்பளத்தை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம், தர்ணா உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக அனுப்பப்பட்ட கோப்பினை கவர்னர் தொடர்ந்து திருப்பி அனுப்புவதாக குற்றஞ்சாட்டினார்.

இந்தநிலையில் தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர், கல்வித்துறை செயலாளருடன் ஆலோசனை நடத்திய முதல்-அமைச்சர் நாராயணசாமி இடைக்காலமாக அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு 6 மாதத்துக்கான சம்பளத்தை வழங்குவதற்கு ஒப்புதல் கேட்டு கோப்பு அனுப்பினார்.

கிரண்பெடி ஒப்புதல்

இதைத்தொடர்ந்து 35 பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க ரூ.8 கோடியே 45 லட்சத்துக்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்துள்ளார். அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு மானியம் வழங்குவது தொடர்பாக கல்வி, நிதி, சட்டத்துறை செயலாளர்கள் அடங்கிய குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கொரோனா காலத்தில் வாகனங்கள் இயக்கப் படாததால் அவற்றுக்கான சாலை வரியை ரத்துசெய்யவும் ஒப்புதல் கேட்டு கோப்புகள் அனுப்பப்பட்டன. இதைத்தொடர்ந்து சரக்கு வாகனங்களுக்கு 2 மாதத்துக்கான சாலை வரியையும், பயணிகள் வாகனங்களுக்கு 6 மாதத்துக்கான சாலை வரியையும் ரத்துசெய்ய ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் அரசுக்கு ரூ.21 கோடி இழப்பு ஏற்படும்.

மேலும் செய்திகள்