அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு கவர்னர் அனுமதி தர மறுத்ததால் சட்டப்படி நடவடிக்கை நாராயணசாமி அறிவிப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க கவர்னர் கிரண்பெடி மறுத்து விட்டதால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளதாக அனைத்துக்கட்சி கூட்டத்துக்குப் பின் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

Update: 2020-11-09 21:27 GMT
புதுச்சேரி, 

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.

அனைத்துக் கட்சி கூட்டம்

இதுதொடர்பாக கோப்பு தயாரித்து கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு ஒப்புதல் தர மறுத்ததுடன் கோப்பை மத்திய அரசுக்கு கவர்னர் கிரண்பெடி அனுப்பி வைத்தார். இந்த விவகாரம் புதுவை மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக ஆலோசிக்க புதுவை சட்டசபை 4-வது மாடியில் உள்ள கருத்தரங்க கூடத்தில் நேற்று மாலை முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.

இதில் அமைச்சர்கள் நமச் சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், வைத்திலிங் கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.ஜெ.ஜெயபால், டி.பி.ஆர்.செல்வம் (என்.ஆர். காங்கிரஸ்), அன்பழகன் (அ.தி.மு.க.), சாமிநாதன் (பா.ஜ.க.), மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், பா.ஜ.க. பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம், ம.தி.மு.க. பொறுப்பாளர் கபிரியேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன், ராஷ்டீரிய ஜனதாதள மாநில செயலாளர் சஞ்சீவி உள்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

விதிமுறைக்கு மாறானது

கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு தருவதற்காக அமைச்சரவை சார்பில் முடிவு செய்து கவர்னரின் ஒப்புதலுக்காக கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு கவர்னர் மறுப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கோப்புகளில் கருத்துவேறுபாடு இருந்தால் விதிமுறைப்படி அமைச்சர்களை அழைத்து கவர்னர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்போது கருத்துகள் நியாயமாக இருந்தால் ஏற்றுக் கொண்டு ஒப்புதல் தர வேண்டும். அப்படி இல்லாமல் தன்னிச்சையாக கோப்பினை மத்திய அரசுக்கு கவர்னர் அனுப்பி வைத்திருப்பது விதிமுறைக்கு மாறானது.

சட்ட ரீதியாக நடவடிக்கை

தமிழக பாடத்திட்டத்தின்படி புதுவை அரசு பள்ளி மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால் சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவுகளில் இருந்து நீட் தேர்வில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதில் அரசு பள்ளி மாணவர்களால் தேர்வு பெற முடியாததால் அவர்களும் மருத்துவ படிப்பில் சேரும் வகையில் 10 சதவீத உள்ஒதுக்கீடுக்கு ஒப்புதல் கோரப்பட்டது. ஆனால் மறுக்கப்பட்டு விட்டது.

10 சதவீத ஒதுக்கீடு வழங்கும் அரசின் முடிவுக்கு அனைத்துக் கட்சிகளும் தற்போது ஆதரவு தெரிவித்துள்ளன. இதுகுறித்து மத்திய உள்துறை மந்திரி, உள்துறை செயலாளரை சந்திக்க நேரம் ஒதுக்க கேட்டுள்ளோம். இந்த சந்திப்பின்போது கவர்னரின் நோக்கம் குறித்து அவர்களிடம் விளக்கி கூறுவோம்.

இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கக் கூடாது என்ற எண்ணத்திலேயே மத்திய அரசுக்கு கவர்னர் கோப்பை அனுப்பி உள்ளார். இதுகுறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு வழங்க கவர்னர் தடையாக இருப்பது பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் தெரியும். மாணவர்களை பகைத்து கொண்டால் மிகப்பெரிய போராட்டமாக வெடிக்கும்.

50 சதவீத இடஒதுக்கீடு

புதுவை மாநில மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க சட்ட வரைவு தயாரித்து கடந்த ஏப்ரல் மாதம் கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அந்த கோப்பு மே மாதம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் புதுவை மாநில மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய உள்துறையிடம் முன்வைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. புறக்கணிப்பு

அனைத்து கட்சி கூட்டத்தை காங்கிரசின் கூட்டணி கட்சியான தி.மு.க. புறக்கணித்தது. இதுபற்றி முதல்-அமைச்சரிடம் கேட்டதற்கு அவர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

மேலும் செய்திகள்