நிரந்தர சந்தை அமைத்து தரக்கோரி மனு கொடுக்க கழுத்தில், காய்கறிகளை மாலையாக அணிந்து வந்த விவசாயிகள்

வேளாங்கண்ணி அருகே பரவையில் நிரந்தர சந்தை அமைத்துதரக்கோரி கழுத்தில் காய்கறிகளை மாலையாக அணிந்து வந்து விவசாயிகள் மனு அளித்தனர்.

Update: 2020-11-09 22:00 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா ஊரடங்கு உத்தரவு அறிவித்த நாளில் இருந்து மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை. அதற்கு பதிலாக அலுவலக வளாகத்தின் முன்பு உள்ள புகார் பெட்டியில் பொதுமக்கள் தங்களது மனுக்களை போட்டு செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் தங்களது மனுக்களை புகார் பெட்டியில் போட்டு விட்டு செல்கின்றனர். நேற்று திங்கட்கிழமை என்பதால் நாகை கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. அப்போது நாகை அருகே பரவை, வேளாங்கண்ணி, தெற்கு பொய்கைநல்லூர், வடக்கு பொய்கைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த காய்கறி வியாபாரிகள் மற்றும் விவசாயிகள், காய்கறிகளை தங்களது கழுத்தில் மாலையாக அணிந்து நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:-

வேளாங்கண்ணி அருகே பரவையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் காய்கறி சந்தை பல ஆண்டு காலமாக இயங்கி வருகிறது. கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது இந்த சந்தையில் பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால் தொற்று ஏற்பட்டது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பரவை சந்தை மூடபட்டது. எனவே மீண்டும் சந்தை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள், வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அருகில் தற்காலிக சந்தை அமைத்து கொடுக்கப்பட்டது.

ஊரடங்கு தளர்வு காலத்தில் தற்காலிக சந்தை மூடப்பட்டு மீண்டும் பழைய இடத்திலேயே இயங்க அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கும், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் அதிக அளவில் கூடுவதால் போதுமான இட வசதி இல்லை. மேலும் திடீரென மழை பெய்வதால் அந்த இடத்தில் காய்கறிகள் விற்பனை செய்ய முடியாத நிலைக்கு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். எனவே வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பரவையில் நிரந்தர சந்தை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கழுத்தில் காய்கறி மாலையுடன் வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்