கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி அரசு மரியாதையுடன் உடல் தகனம்

ஈரோட்டில் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Update: 2020-11-10 05:30 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை மாவட்டத்தில் 90 போலீசார் உள்பட மொத்தம் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

மேலும் மாவட்டத்தில் 130-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தமிழகத்தில் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பிரபலங்கள் என யாரையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை.

இந்தநிலையில் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 56) என்பவருக்கு கடந்த மாதம் 17-ந்தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமானதால் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை ரவிச்சந்திரன் இறந்ததாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அவரது உடல் ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் கருங்கல்பாளையத்தில் உள்ள ஆத்மா மின்மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, போலீசார் அரசு மரியாதை செலுத்தினார்கள்.

அப்போது 7 போலீசார் 3 முறை என மொத்தம் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. கொரோனா தொற்றின் காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் இறந்த சம்பவம் ஈரோடு மாவட்ட போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்