நெல்லையில் அறிவியல் மையம்-அருங்காட்சியகம் திறப்பு: கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றிய பார்வையாளர்கள்

நெல்லையில் உள்ள மாவட்ட அறிவியல் மையம், அருங்காட்சியகம் ஆகியவை நேற்று திறக்கப்பட்டன. அங்கு பார்வையாளர்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பார்வையிட்டனர்.

Update: 2020-11-10 23:12 GMT
நெல்லை, 

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் பொழுதுபோக்கு பூங்கா, அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதைத்தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில் அறிவியல் மையம், பொழுதுபோக்கு பூங்காக்கள், அருங்காட்சியகம் ஆகியவற்றை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி நேற்று நெல்லையில் உள்ள மாவட்ட அறிவியல் மையம் திறக்கப்பட்டது. பொதுமக்கள் வருவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதல்கட்டமாக பூங்கா, காட்சிக்கூடம் மட்டுமே திறக்கப்பட்டது.

இலவச முககவசம்

அறிவியல் மையத்துக்கு வந்தவர்கள் கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவிவிட்டு உள்ளே சென்றனர். டிக்கெட் எடுத்து வரும் பார்வையாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு முககவசம் இலவசமாக வழங்கப்பட்டது. பார்வையாளர்கள் காட்சிக் கூடத்தில் உள்ளவற்றை தொட்டு இயக்குவதை தவிர்க்கும் விதமாக சென்சார் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் காட்சி அரங்குகள் முன்பு குறியீடுகள் போடப்பட்டிருந்தது. தற்போது 3டி தியேட்டர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அரசு அறிவித்த பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வந்து செல்லுமாறு அறிவியல் மைய அதிகாரிகள் பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தினர்.

அருங்காட்சியகம்

பாளையங்கோட்டையில் அரசு அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகம் நேற்று திறக்கப்பட்டது. தற்போது அருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. சிலைகள், பழங்கால நாணயங்கள் அனைத்தும் பார்வையாளர்கள் பார்த்து செல்ல வைக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் உள்ளே செல்லும்போது கிருமி நாசினி கொண்டு கை கழுவிவிட்டு சென்றனர். அவர்கள் சமூக இடைவெளியுடன் பழங்கால சின்னங்களை பார்த்து ரசித்தனர்.

மேலும் செய்திகள்