குமரியில் ரூ.214 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

குமரி மாவட்டத்தில் ரூ.214.36 கோடி மதிப்பில் திட்ட பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2020-11-11 15:34 GMT
நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் புதிய திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகள் தொடக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலமாக குமரி மாவட்டம் வந்தார். குமரி மாவட்டம் வந்த அவருக்கு ஆரல்வாய்மொழியில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு தோவாளையிலும், வடசேரி மற்றும் டதி பெண்கள் பள்ளி சந்திப்பிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் கோலாகல வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட அவர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுத்தார்.

இதை தொடர்ந்து விழா நடைபெறும் மேடைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதியம் 2.30 மணிக்கு வந்தார். விழா மேடையில் ஏறியதும் அங்கு வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதாவது பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, போக்குவரத்துத்துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.60.44 கோடி மதிப்பில் 36 புதிய திட்ட பணிகளை கலெக்டர் அலுவலகத்தில் இருந்தபடி அவர் தொடங்கி வைத்தார்.

இதேபோல நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், காவல்துறை, மீன்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை, சமூக நலத்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் நில அளவைத்துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.153.92 கோடி மதிப்பில் முடிவுற்ற 21 திட்ட பணிகளை திறந்து வைத்தார். அந்த வகையில் முடிவுற்ற மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களை சேர்த்து மொத்தம் ரூ.214.36 கோடி மதிப்பிலான திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அந்த வகையில் 2 ஆயிரத்து 736 பேருக்கு ரூ.54.22 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, அடையாளமாக 7 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டு இருக்கும் புகைப்பட கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

அப்போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

இதனையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கூட்டரங்கில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு உள்ள பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில், குமரி மாவட்டத்தில் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு இருக்கும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் பற்றியும் வினாவினார். ஆய்வு கூட்டமானது மாலை 5 மணி வரை நடந்தது. ஆய்வு கூட்டம் முடிந்ததும் குமரி மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் பற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்துரைத்தார். மேலும் புதிதாக தொடங்கப்பட உள்ள திட்டங்கள், பரிசீலனையில் உள்ள திட்டங்கள் பற்றியும் கூறினார். பின்னர் மீண்டும் அரசு விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி குமரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆரல்வாய்மொழி முதல் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் வரை உள்ள முக்கிய இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

விழா நடைபெற்ற கலெக்டர் அலுவலகம், அரசு விருந்தினர் மாளிகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்