ஒசகுட்டதஹள்ளி தொழிற்சாலையில் தீ விபத்து: விசாரணை அறிக்கை வந்தவுடன் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை

ஒசகுட்டதஹள்ளி தொழிற்சாலை தீ விபத்து குறித்த விசாரணை அறிக்கை வந்தவுடன் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

Update: 2020-11-12 19:55 GMT
பெங்களூரு, 

பெங்களூரு ஒசகுட்டதஹள்ளியில் வேதிப்பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.4 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன. அதன் அருகில் இருந்த குடியிருப்பு கட்டிடங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தீவிபத்து ஏற்பட்ட அந்த தொழிற்சாலையை சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நேற்று நேரில் வந்து பார்வையிட்டார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இந்த தொழிற்சாலையில் சட்டவிரோதமாக சானிடைசர் உள்பட ரசாயன பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன என்ற புகார் இருக்கிறது. சானிடைசர் இருப்பு வைக்க மருந்து கட்டுப்பாட்டு மையத்திடம் அனுமதி பெற வேண்டியது அவசியம். சட்டவிரோதமாக ரசாயனத்தை சேகரித்து வைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். குடியிருப்பு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளை அடையாளம் கண்டு அதை வேறு இடங்களுக்கு மாற்ற மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தக்க நடவடிக்கை

அருகில் இருக்கும் வீடுகளில் உள்ள பொருட்களும் எரிந்துள்ளன. இதன் இழப்பீடு குறித்து மாநகராட்சி இணை கமிஷனர் ஆய்வு செய்து அறிக்கை வழங்குவார். அதன் பிறகு முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் ஆலோசித்து நிவாரணம் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை அறிக்கை வந்தவுடன் தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

மேலும் செய்திகள்