கழுத்தை நெரித்து முதியவர் கொலை: பேரன் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு

சொத்து தகராறில் கழுத்தை நெரித்து முதியவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய பேரன் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2020-11-14 23:15 GMT
ஈரோடு, 

கோபி அருகே சொத்து தகராறில் கழுத்தை நெரித்து முதியவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய பேரன் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோபியை அடுத்த சுண்டப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 84). விவசாயி. இவருக்கு மூர்த்தி என்ற மகனும், சகுந்தலா என்ற மகளும் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் முடிந்து அவரவர் குடும்பத்துடன் அதே ஊரில் தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இதேபோல் பழனிச்சாமியும் தனியாக வசித்து வந்தார். ஏற்கனவே இவர்களுடைய குடும்பத்தில் சொத்து சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், தன்னுடைய இடம் ஒன்றை விற்பனை செய்ய பழனிச்சாமி முயற்சித்து உள்ளார். இதற்கு மூர்த்தியும், சகுந்தலாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அதில் தங்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, நேற்று முன்தினம் மதியம் பழனிச்சாமி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், ‘பழனிச்சாமியிடம் சொத்தை பிரித்து தருமாறு மகன் மூர்த்தியும், மகள் சகுந்தலாவும் கேட்டு உள்ளனர். ஆனால் அதற்கு பழனிச்சாமி மறுத்து விட்டாராம். இந்த நிலையில், பழனிச்சாமியின் பேரன் மற்றும் அவனுடைய 14 வயது 2 நண்பர்கள் என 3 பேர் நேற்று முன்தினம் பழனிச்சாமியின் வீட்டுக்கு சென்று உள்ளனர். அப்போது பழனிச்சாமிக்கும், அவருடைய பேரனுக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த பேரன், மற்றும் அவனுடைய நண்பர்கள் 2 பேர் சேர்ந்து பழனிச்சாமியை தாக்கி உள்ளனர். இதில் அவர் கட்டில் மேல் விழுந்தார். பின்னர், 3 பேரும் சேர்ந்து பழனிச்சாமியின் கழுத்தை நெரித்துள்ளனர். இதில் அவர் இறந்துவிட்டார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றது,’ தெரிய வந்தது. எனினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதுடன், தப்பி ஓடியதாக கூறப்படும் பழனிச்சாமியின் பேரன் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்