தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் - ராசிபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று ராசிபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Update: 2020-11-14 20:50 GMT
ராசிபுரம்,

தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் அவர் ராசிபுரம் அருகே பட்டணம் குச்சிக்காடு பகுதிக்கு சென்றார். அப்போது அவருக்கு ராசிபுரம் நகர தி.மு.க. மற்றும் இளைஞர் அணி சார்பில் ஆத்தூர் சாலையில் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் நகர செயலாளர் சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. பழனியம்மாள், நகர இளைஞர் அணி செயலாளர் கார்த்திக், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணைஅமைப்பாளர் பாலு, மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பட்டணம் அருகே குச்சிக்காடு பகுதியில் கலைஞர் அறிவு திருக்கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதனை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். இதையடுத்து பயனாளிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் 3 சதவீத உள் இடஒதுக்கீடு காரணமாக பயன் அடைந்த அருந்ததியர் சமூக மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர் டாக்டர் மதிவேந்தன் வரவேற்றார்.

பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் கிராமப்புற மற்றும் ஏழை, எளிய மாணவர்களும் பயன் அடைவதற்காக கருணாநிதி கவுன்சிலிங் முறையை கொண்டு வந்தார். ஆனால் பா.ஜ.க. அரசு நீட் தேர்வை கொண்டு வந்துள்ளது. அதை அ.தி.மு.க. அரசு தடுக்கவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதன்படி தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் கலைஞர் அறிவு திருக்கோவில் கட்டுவதற்கு நிலம் வழங்கிய பட்டணம் பேரூர் செயலாளர் பொன் நல்லதம்பிக்கு உதயநிதி ஸ்டாலின் பட்டாடை வழங்கினார். மேலும் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் தி.மு.க. இளைஞர் அணி துணைச்செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ., நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.ராமசாமி, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார் இளங்கோவன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்