விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுச்சேரியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

Update: 2020-11-16 00:28 GMT
புதுச்சேரி, 

புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தீபாவளி திருநாளான நேற்று முன்தினம் பகலில் மழை ஏதும் இல்லை. இதனால் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடினார்கள். இருந்தபோதிலும் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மேல் மழைபெய்ய தொடங்கியது.

இந்த மழை நேற்று காலை வரை விட்டுவிட்டு பெய்தது. அவ்வப்போது பலத்த மழையாக கொட்டியது. தொடர் மழை காரணமாக தாழ்வான சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. பகலில் வெயில் முகம் காட்டாத வகையில் வானில் மேகங்கள் திரண்டு இருந்தன. மாலை வரை இடைவெளி விட்டு மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

நேற்று விடுமுறை தினம் என்பதால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியிருந்தனர். இருசக்கர வாகனங்களில் வெளியில் வந்தவர்கள் மழைக்கோட்டு அணிந்திருந்ததை காண முடிந்தது. பலர் மழையில் நனைந்தபடி சென்றனர். மழை காரணமாக பகலிலும் குளிர்ந்த சூழ்நிலை நிலவியது.

சுற்றுலா பயணிகள்

அதே நேரத்தில் புதுவைக்கு வார இறுதியில் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. கடற்கரை, ஒயிட் டவுண் பகுதியில் சுற்றுலா பயணிகள் குடை பிடித்தபடியும், மழையில் நனைந்தபடியும் சென்றதை காண முடிந்தது.

தொடர் மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவிலை. இதனால் தேங்காய்திட்டு துறைமுகத்தில் விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

மேலும் செய்திகள்