கொடைக்கானல் வனப்பகுதி சுற்றுலா இடங்கள் திறப்பு: கொட்டும் மழையில் நனைந்தபடி இயற்கை எழிலை ரசித்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களை பார்வையிட நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இயற்கை எழில்மிகு காட்சிகளை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

Update: 2020-11-18 02:20 GMT
கொடைக்கானல்,

‘மலைகளின் இளவரசி’ யான கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக் கிறது. அவர்கள் கொடைக் கானல் நகரில் உள்ள பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களை பார்த்து ரசித்தனர்.

இந்தநிலையில் கொடைக் கானல் வனப்பகுதியில் உள்ள பைன்மரக்காடுகள், குணாகுகை, தூண்பாறை உள்ளிட்ட 12 மைல் சுற்றளவுக்குள் உள்ள சுற்றுலா இடங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களை பார்வையிட வனத்துறை நேற்று முதல் அனுமதி அளித்தது.

இதையடுத்து சுமார் 8 மாதங்களுக்கு பிறகு வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்கள் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் அவ்விடங்களுக்கு சென்றனர். கொடைக்கானலில் நேற்று பலத்த மழை கொட்டியது. இருப்பினும் அந்த மழையை பொருட்படுத்தாமல் வனப்பகுதியில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

குறிப்பாக மோயர் பாயிண்ட், குணா குகை, பைன்மரக்காடுகள், தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, மதிகெட்டான் சோலை உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முன்னதாக வனத்துறை சார்பில், சுற்றுலா பயணிகளுக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் திறக்கப்பட்ட சுற்றுலா இடங்களில் வனத்துறை சார்பில் கூடுதல் வனக்காப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், சுற்றுலா இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளை சமூக இடைவெளி கடைபிடிப்பதை கண்காணிக்கவும், கிருமி நாசினி கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்கள் திறக்கப்பட்டதால் சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்