திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிறுவன் விழுங்கிய ஒரு ரூபாய் நாணயம் அறுவை சிகிச்சையின்றி அகற்றம் - டாக்டர்களுக்கு பாராட்டு

சிறுவன் விழுங்கிய ஒரு ரூபாய் நாணயம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டது.

Update: 2020-11-18 09:00 GMT
திருவண்ணாமலை,

செங்கம் தாலுகா காஞ்சி அரிதாரிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மகன் வேலு (வயது 5). இவன், நேற்று முன்தினம் வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கி உள்ளான். இதையறிந்த வேலுவின் பெற்றோர் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அங்கு உடனடியாக மருத்துவர்கள் சிறுவனுக்கு சிகிக்சை மேற்கொண்டனர். நுண்கதிர் பரிசோதனையில் சிறுவனின் தொண்டை பகுதியில் நாணயம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து இரவு 7 மணிக்கு சிறுவனுக்கு மறுபரிசோதனை செய்யப்பட்டு, சிறுவனுக்கு அறுவை சிகிச்சையின்றி எண்டோஸ்கோப் மூலமாக சிறுவன் விழுங்கிய நாணயத்தை டாக்டர்கள் வெளியில் எடுத்தனர். பின்னர் சிறுவன் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது சிறுவன் நலமாக இருக்கிறான். அறுவை சிகிச்சையின்றி சிறுவன் விழுங்கிய நாணயத்தை அகற்றிய டாக்டர் குழுவினரை மற்ற டாக்டர்கள் மற்றும் சிறுவனின் உறவினர்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்