அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சேறும், சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டம் - முத்துப்பேட்டை அருகே நடந்தது

முத்துப்பேட்டை அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சேறும், சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-11-18 15:15 GMT
முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த ஆலங்காடு ஊராட்சி வலம்பக்காடு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் நீண்டகாலமாக முறையான குடிநீர், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டவைகளுக்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில் வலம்பக்காடு கிராமத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதி சாலை சேறும், சகதியுமாக மாறி மக்கள் நடந்து செல்ல கூட முடியாமல் உள்ளதால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பெண்கள் சேறும் சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். அப்போது அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில்,வலம்பகாடு கிராமம் அலங்காடு ஊராட்சியின் 6-வது வார்டு ஆகும். இந்த பகுதியில் குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறோம். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் எந்தவித பயனும் இல்லை.

தொடர் மழை காரணமாக சாலையில் சேறும் சகதியுமாக உள்ளதால் வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை. எனவே எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவிட்டால் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றனர்.

மேலும் செய்திகள்