புதிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தக் கோரி கல்வித்துறை அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை

புதிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தக்கோரி கல்வித்துறை அலுவலகத்தை பாரதீய ஜனதா கட்சியினர் முற்றுகையிட்டனர்.

Update: 2020-11-19 04:22 GMT
புதுச்சேரி, 

புதிய கல்விக்கொள்கையை புதுவை அரசு நடைமுறைப் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தி வருகிறது. இதை வலியுறுத்தி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக அந்த கட்சி அறிவித்திருந்தது. இதன்படி அவர்கள் புதுவை சுதேசி மில் அருகே கூடினார்கள். அங்கிருந்து கல்வித்துறை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு பாரதீய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.

ஊர்வலத்தை கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார். ஊர்வலத்தில் மாநில பொதுச்செயலாளர்கள் ஏம்பலம் செல்வம், மோகன்குமார், இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் பொதுச்செயலாளர்கள் சரவணகுமார், சக்தி கிருஷ்ணராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஊர்வலம் மறைமலையடிகள் சாலை, நெல்லித்தோப்பு சந்திப்பு, இந்திராகாந்தி சிலை வழியாக கல்வித்துறை அலுவலகத்தை அடைந்தது. அங்கு பாரதீய ஜனதா கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.

இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்