சிங்கப்பெருமாள் கோவிலில் ஓட்டல் ஊழியர் வெட்டிக்கொலை 5 பேர் கைது

சிங்கப்பெருமாள் கோவிலில் ஓட்டல் ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2020-11-19 05:37 GMT
வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு என்கிற குண்டு பாபு (வயது 26). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி இவருக்கும் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த பரணி என்பவருக்கும் நிலப்பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சிங்கப்பெருமாள் கோவில் எம்.ஜி.ஆர். தெருவில் பாபு நடந்து செல்லும்போது பரணி தலைமையில் காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் பாபுவை வழி மறித்தது. அவர்களிடம் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக பாபு ஓடும்போது விடாமல் துரத்தி சென்ற அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி தலை உள்ளிட்ட இடங்களில் வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு காரில் தப்பிச்சென்று விட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த பாபு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த பரணி என்கிற பரணிதரன் (40), கார்த்திக் என்கிற சொரி கார்த்திக் (31), சரத் என்கிற சரத்குமார் (25), ஒட்ட கார்த்தி (24), அனீஷ் (25) ஆகியோரை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்