தூத்துக்குடியில் விநாயகர் கோவிலை இடிக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல் - கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது

தூத்துக்குடியில் விநாயகர் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-11-19 09:15 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டேட்வங்கி காலனி 60 அடி சாலையில் சக்தி விநாயகர் கோவில் அமைந்து உள்ளது. இந்த பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 6 அடி அகலம் உள்ள மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கு விநாயகர் கோவில் இடையூறாக இருப்பதாக கூறி, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கோவிலை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலையில் அதிகாரிகள், பொக்லைன் எந்திரத்துடன் கோவிலை இடிப்பதற்காக வந்தனர்.

அப்போது அந்த பகுதி மக்கள், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த கீதாஜீவன் எம்.எல்.ஏ. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதிகாரிகள் கோவிலை இடிப்பதில் உறுதியாக இருந்தனர். இதனால் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், எம்.எல்.ஏ.வை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, கோவில் தற்போது இடிக்கப்படாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் சாலை மறியிலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதனால் தூத்துக்குடியில் நேற்று காலையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்