குருபரப்பள்ளி அருகே, ராணுவ வீரரிடம் கத்தியை காட்டி செல்போன் பறிப்பு - 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு

குருபரப்பள்ளி அருகே பட்டப்பகலில் ராணுவவீரரிடம் கத்தியை காட்டி செல்போனை பறித்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-11-19 09:45 GMT
குருபரப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள கே.திப்பனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜூனன் (வயது 30). இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். விடுமுறைக்காக அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குந்தாரப்பள்ளி அருகே சாலையில் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் முககவசம் அணிந்தவாறு மல்லிகார்ஜூனனை வழிமறித்து நிறுத்தி உள்ளனர். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் அந்த நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.7ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லிகார்ஜூனன் இதுகுறித்து குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ராணுவ வீரரிடம் கத்தியை காட்டி மிரட்டி மர்ம நபர்கள் செல்போனை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்