கடலில் சூறைக்காற்று: குமரி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை - கடற்கரையில் ஓய்வெடுத்த படகுகள்

கடல் பகுதியில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததால் குமரியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் கடற்கரையில் ஓய்வெடுத்தன.

Update: 2020-11-19 17:00 GMT
கன்னியாகுமரி,

குமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் 300 விசைப்படகுகள், 1000-க்கும் மேற்பட்ட வள்ளங்கள் மூலம் மீனவர்கள் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். குமரியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. மேலும் குமரி கடல், தென் கிழக்கு அரபிக்கடல், கேரள, மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு ஆகிய கடல் பகுதியில் 2 நாட்களுக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவல் அனைத்து மீன் கூட்டுறவு சங்கங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் குமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசியது. மேலும் காற்றுடன் மழையும் பெய்ததால் குளச்சல் கடலில் கட்டுமரங்களை செலுத்த முடியவில்லை.

இதன் காரணமாக குளச்சல், கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை, கொட்டில்பாடு, மண்டைக்காடு புதூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

அனைத்து கட்டுமரங்களும் பாதுகாப்பாக கரையின் மேடான பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டன. எனினும் ஒரு சில கட்டுமரங்கள் கடலுக்கு சென்றன. ஆனால் மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர். குளச்சல் பகுதியில் நேற்று மீன் வரத்து இல்லாததால் வியாபாரிகள், மீன் பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுபோன்ற சூழ்நிலையால் குளச்சல் துறைமுகமும் வெறிச்சோடி காணப்பட்டது.

கன்னியாகுமரி சின்னமுட்டம் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறது. இந்த விசைப்படகுகள் நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அந்த விசைப்படகுகள் துறைமுகத்தில் ஓய்வெடுத்ததால், அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்