மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முன் கொட்டும் மழையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழகம் முன்பாக கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-11-19 17:09 GMT
பேட்டை, 

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அருந்ததி ராய் எழுதிய புத்தகம் நீக்கப்பட்டதை கண்டித்தும், அந்த புத்தகத்தை மீண்டும் சேர்க்க வலியுறுத்தியும் நேற்று இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழகம் முன்பாக கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் கண்ணன், மாநில செயலாளர் மாரியப்பன் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து 10 மாணவர்கள் மட்டும் துணைவேந்தரை சந்தித்து மனு கொடுக்க செய்தனர். அதன்படி அந்த அமைப்பை சேர்ந்த மாநில தலைவர் கண்ணன், செயலாளர் மாரியப்பன், மத்திய செயற்குழு உறுப்பினர் சத்யா உள்ளிட்ட 10 மாணவர்கள் துணைவேந்தரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட துணைவேந்தர் பிச்சுமணி, பாடத்திட்ட குழு கமிட்டியுடன் பரிசீலனை செய்து 15 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என்றார். பல்கலைக்கழக பதிவாளர் பலவேசம், தொலைநெறி தொடர் கல்வி இயக்குனர் ராஜலிங்கம், பேராசிரியர்கள் செந்தாமரைக்கண்ணன், மருது குட்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்