ஜல்னாவில் பரிதாபம் மின்சாரம் தாக்கி சகோதரர்கள் 3 பேர் பலி கிணற்றில் பிணமாக கிடந்தனர்

ஜல்னாவில் மின்சாரம் தாக்கி சகோதரர்கள் 3 பேர் பலியானார்கள். அவர்கள் கிணற்றில் பிணமாக கிடந்தனர்.

Update: 2020-11-19 22:15 GMT
ஜல்னா,

ஜல்னா மாவட்டம் போகர்தான் தாலுகா பாலஸ்கேத் பிம்பிள் கிராமத்தை சேர்ந்தவர்கள் தியானேஷ்வர் (வயது 27), ராமேஷ்வர் (24), சுனில் (18). இவர்கள் 3 பேரும் அண்ணன்-தம்பிகள்.

நேற்று முன்தினம் மாலையில் அவர்கள் தங்களது விளை நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்துக்கு சென்றனர். இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தோட்டத்தில் உள்ள கிணற்றில் 3 பேரும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களது உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

மின்சாரம் தாக்கி...

விசாரணையில் 3 பேரில் ஒருவர் கிணற்றில் இருந்த மோட்டாரை இயக்க முயன்று இருக்கலாம் என்றும், அப்போது அவர் மின்சாரம் தாக்கி தண்ணீரில் தூக்கி வீசப்பட்டு இருக்கலாம் என்றும் தெரிகிறது. மற்ற சகோதரர்கள் 2 பேரும் அவரை காப்பாற்ற கிணற்றில் குதித்து இருக்கலாம் என்றும், இதில் அவர்களையும் மின்சாரம் தாக்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே மின்சாரம் தாக்கி அண்ணன் -தம்பிகள் 3 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. இதில் தியானேஷ்வருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் ஆனது. மற்ற 2 பேரும் அவுரங்காபாத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தபோது, கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்பிய நிலையில், இந்த பரிதாபம் நிகழ்ந்து உள்ளது. இந்த துயர சம்பவம் அந்த கிராம மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்