உடல் நலக்குறைவால் தி.மு.க. எம்.எல்.ஏ. பூங்கோதை ஆஸ்பத்திரியில் திடீர் அனுமதி

உடல் நலக்குறைவு காரணமாக ஆலங்குளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. பூங்கோதை நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Update: 2020-11-20 00:27 GMT
ஆலங்குளம், 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் பூங்கோதை (வயது 56). இவர் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் மகள் ஆவார். பூங்கோதை கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியின்போது அமைச்சராக பொறுப்பு வகித்தவர்.

இந்த நிலையில் பூங்கோதை ஆலங்குளத்தில் உள்ள வீட்டில் தங்கி இருந்தார். நேற்று காலையில் அவர் கண் விழிக்காமல் படுக்கையில் நீண்ட நேரம் படுத்திருந்தார். அவரை எழுப்ப முயற்சி செய்தபோது அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

ஆஸ்பத்திரியில் அனுமதி

உடனடியாக அவரை நெல்லை சந்திப்பில் உள்ள ஷிபா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆஸ்பத்திரிக்கு சென்று பூங்கோதையை பார்வையிட்டு, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.

உடல்நிலை சீராக உள்ளது

இது தொடர்பாக ஷிபா ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் நேற்று பிற்பகலில் மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா எம்.எல்.ஏ. சுய நினைவு இல்லாத நிலையில் எங்களது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தற்போது சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் நிலையில் உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள அவர் தற்போது விழிப்புடன் உள்ளார். உடல்நிலை சீராக உள்ளது. அவரது உடல்நிலையை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தூக்க மாத்திரை தின்றதாக பரபரப்பு

இதற்கிடையே, அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்றதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்