பெண்ணை கொன்ற மாமனார், கொழுந்தனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு

சொத்து பிரச்சினையில் பெண்ணை கொன்ற மாமனார், கொழுந்தனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2020-11-20 05:27 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா மழவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி தனலட்சுமி(வயது 28). முருகன் கூட்டுக்குடும்பமாக இருந்தபோது, குடும்பத்தை பராமரித்து வந்ததோடு தன்னுடைய 2 தங்கைகளுக்கும் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதனிடையே முருகன், சீட்டுப்பணம் எடுத்து தனது சொந்த வேலைக்கு செலவு செய்து விட்டதாகவும், மனைவி தனலட்சுமி பெயரில் இடம் வாங்கி விட்டதாகவும் முருகனின் தந்தை சுப்பிரமணியன்(70), தம்பி சின்னத்துரை(38) ஆகியோர் கருதி, பொதுவாக உள்ள சொத்தான 3 ஏக்கர் நிலத்தில் சம பங்கு கொடுக்காமல் அவரை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.

இதனால் முருகன், ஊர் பஞ்சாயத்தை கூட்டி சொத்தில் தனக்கும் சம பங்கு வேண்டும் என்று முறையிட்டுள்ளார். அதற்கு முருகனுக்கும், அவரது தம்பி சின்னத்துரைக்கும் சொத்தை சரி சமமாக எழுதிக்கொடுக்க வேண்டும் என்று ஊர் பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி முருகனுக்கு ஒரு குறிப்பிட்ட இடம் பிரித்துக்கொடுக்கப்பட்டது. அந்த இடத்தில் முருகன், விவசாயம் செய்து வந்துள்ளார். மேலும் சொத்து பிரச்சினை காரணமாக முருகன் மீது அவரது தந்தை சுப்பிரமணியன், தம்பி சின்னத்துரை ஆகியோருக்கு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் 19.8.2013 அன்று முருகன், தனது மனைவி தனலட்சுமி மற்றும் 2 குழந்தைகளுடன் அதே கிராமத்தில் உள்ள தன்னுடைய நிலத்தில் விவசாய வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த சின்னத்துரை, அவரது தந்தை சுப்பிரமணியன், தாய் ராணி, சுப்பிரமணியனின் மருமகன் மலைவாசன் (48) ஆகியோர் முன்விரோதம் காரணமாக முருகனிடம் தகராறு செய்தனர்.

அப்போது ஆத்திரமடைந்த சின்னத்துரை, சுப்பிரமணியன் ஆகிய இருவரும் சேர்ந்து முருகனை கத்தியால் வெட்டினர். இதனை அவரது மனைவி தனலட்சுமி தடுக்க முயன்றார். அப்போது தனலட்சுமியை அவர்கள் இருவரும் சேர்ந்து தகாத வார்த்தையால் திட்டியதோடு கத்தியால் குத்தினர். இதில் தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த முருகன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த சம்பவம் குறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னத்துரை, சுப்பிரமணியன், ராணி, மலைவாசன் ஆகியோரை கைது செய்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும்போதே, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராணி இறந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட சின்னத்துரை, சுப்பிரமணியன் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தும், மலைவாசனை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பு கூறினார்.

அதாவது தனலட்சுமியை கொலை செய்த குற்றத்திற்காக சின்னத்துரை, சுப்பிரமணியன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், கொலை செய்ய கூட்டுச்சதி செய்த குற்றத்திற்காக இருவருக்கும் ஆயுள் தண்டனையும், முருகனை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக இருவருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.6 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், இந்த தண்டனை காலங்களை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறப்பட்டது. ஏக காலத்தில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதால், இருவரும் தலா 14 ஆண்டு சிறை தண்டனை மட்டுமே அனுபவிப்பார்கள்.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட சின்னத்துரை, சுப்பிரமணியன் ஆகிய இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வக்கீல் ராதிகா செந்தில் ஆஜரானார்.

மேலும் செய்திகள்