துபாயில் இருந்து மதுரைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.56½ லட்சம் தங்கம் பறிமுதல் - களிமண் கட்டிக்குள் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது

துபாயில் இருந்து மதுரைக்கு களிமண் கட்டிக்குள் பதுக்கி கடத்தி வந்த ரூ.56½ லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-11-20 13:56 GMT
மதுரை,

துபாயில் இருந்து மதுரைக்கு நேற்று ஒரு ஏர் இந்தியா விமானம் வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் வந்தது. அதனை தொடர்ந்து அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும் சுங்க புலனாய்வு துணை கமிஷனர் ஜெய்சன் பிரவீன்குமார் தலைமையிலான அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். விமானத்தில் வந்த 2 பயணிகள் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது, களிமண் கட்டிகளில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதில் சுமார் ஒரு கிலோ 100 கிராம் தங்கம் இருந்தது. அதன் மதிப்பு 56 லட்சத்து 58 ஆயிரத்து 647 ரூபாய் ஆகும். இதனையடுத்து அவர்களிடம் இருந்து தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து, அவர்கள் இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் சென்னை கொருக்கு பேட்டை சேர்ந்த கவுசிக்ராஜா, திருவல்லிக்கேணி பிரசால் என தெரிய வந்தது.

மேலும் செய்திகள்