மும்பை மாநகராட்சியில் காவி கொடியை அகற்ற நினைப்பவர்களின் முயற்சியை மக்கள் தோற்கடிப்பார்கள் சிவசேனா கருத்து

மும்பை மாநகராட்சியில் காவி கொடியை அகற்ற நினைப்பவர்களின் முயற்சியை மக்கள் தோற்கடிப்பார்கள் என சிவசேனா கூறியுள்ளது.

Update: 2020-11-20 22:02 GMT
மும்பை, 

மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் வருகிற 2022-ம் ஆண்டு நடைபெற உள்ள மும்பை மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்து இருந்தார். மேலும் அவர், “ மும்பை மாநகராட்சியில் மீண்டும் காவி கொடி ஏற்றப்படும். ஆனால் அது பா.ஜனதாவின் கொடியாக இருக்கும்“ என கூறினார்.

தேவேந்திர பட்னாவிசின் இந்த பேச்சுக்கு சாம்னா பத்திரிகையில் சிவசேனா பதில் அளித்து உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மும்பை மக்கள் தோற்கடிப்பார்கள்

புனே லால் மகாலில் பாலா நந்து, சின்டு பட்வர்தன் ஆகியோர் காவி கொடியை இறக்கி, ஆங்கிலேயரின் கொடியை ஏற்றினர். அது புனே மக்களுக்கு வேதனையை அளித்தது. சிலர் மகிழ்ச்சியில் திளைத்தனர். அவர்களின் வழியில் வந்து மும்பை மாநகராட்சியிலும் காவி கொடியை அகற்ற நினைப்பவர்களின் முயற்சியை மும்பை மக்கள் தோற்கடிப்பார்கள். மும்பை மாநகராட்சியின் காவி கொடி மராட்டியத்தின் பெருமை ஆகும்.

அவர்கள் அரசியல் ஆதாயத்திற்காக மும்பையில் காவி கொடியை இறக்க விரும்புகின்றனர். மும்பை மாநகராட்சியில் இருந்து காவி கொடியை அகற்ற கனவு கண்பவர்கள் அரசியலில் இருந்தும், பொதுவாழ்வில் இருந்தும் நிரந்தரமாக காணாமல் போவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்