காங்கிரஸ் பொதுச் செயலாளரை கொல்ல முயன்றதாக 8 பேர் சிக்கினர் - ரகசிய இடத்தில் போலீசார் விசாரணை

காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரை கொலை செய்ய முயன்றதாக 8 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2020-11-21 22:45 GMT
புதுச்சேரி,

புதுவை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம் முதலியார்பேட்டை வயல்வெளி நகரில் உள்ள தனது வீட்டுக்கு கடந்த 19-ந்தேதி இரவு சென்றபோது அவரது காரை ஒரு கும்பல் மறித்தது. அப்போது காரில் கல்வீசியும், அரிவாளால் வெட்டியும் அவரை கொலை செய்ய முயன்றது. இந்த சம்பவத்தில் ஏ.கே.டி.ஆறுமுகம் உயிர் தப்பினார்.

இதுகுறித்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

இதையொட்டி முதலியார்பேட்டை போலீசார் பிடியில் நேற்று 8 பேர் சிக்கி இருப்பதாக தெரிகிறது. ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில் தான் ஏ.கே.டி. ஆறுமுகத்தை கொலை செய்ய முயற்சி செய்தது ஏன்? என்பது உள்பட பல்வேறு தகவல்கள் தெரியவரும்.

ஏ.கே.டி.ஆறுமுகத்தின் சொந்த ஊரான கல்மண்டபம் கிராமத்தை சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் நேற்று காலை நெட்டப்பாக்கம் - தவளக்குப்பம் மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் நெட்டப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்