தஞ்சை பூக்காரத்தெருவில் 200 கடைகளில் ஆக்கிரமிப்பு அகற்றம் - போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

தஞ்சை பூக்காரத் தெருவில் 200-க்கும் மேற்பட்ட கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றினர். இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு காணப்பட்டது.

Update: 2020-11-22 05:59 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை பூக்காரத் தெரு எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி ஆகும். இந்தப்பகுதியில் பூச்சந்தை, சுப்பிரமணியசாமி கோவில், அரிசி கடைகள், இறைச்சி கடைகள் ஏராளமாக உள்ளன. இதனால் இந்தப் பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். இந்த சாலையில் இரு பகுதிகளிலும் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளின் முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கீற்று மற்றும் ஆஸ்பெட்டாஸ் சீட் மூலம் கொட்டகைகளும் போடப்பட்டிருந்தன.

சில கடைகளின் முன்பு தரைதளத்தில் சிமெண்ட் தளமும் போடப்பட்டு இருந்தது. முன்பு இந்த சாலைகளில் பஸ் போக்குவரத்து இருந்தது. நாளடைவில் சாந்தப்பிள்ளைகேட் பகுதியில் பாலம் கட்ட தொடங்கியதில் இருந்து பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் சாலையும் ஆக்கிரமிப்புகளால் சுருங்கிக்கொண்டே சென்றது.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து வியாபாரிகளும் தங்களுக்கு அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதன்படி அவகாசமும் அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் முருகன் கோவிலில் சஷ்டி விழா முடிந்தபின்னர் ஆக்கிரமிப்பு அகற்றுவது என மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் உத்தரவின்பேரில், உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பொக்லின் எந்திரம் மூலமும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கடைகள் முன்பு போடப்பட்டுள்ள சிமெண்ட் தளமும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. கடைகள் முன்பு போடப்பட்டிருந்த கொட்டகைகளும் அகற்றப்பட்டன.

சில கடைகளின் உரிமையாளர்கள் தங்கள் கடையின் முன்பு போடப்பட்டிருந்த கொட்டகைகளை தாங்களே அகற்றினார். இந்தப் பகுதியில் மட்டும் நேற்று 200-க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை யொட்டி அந்த பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றதால் பூக்காரத் தெருவில் போக்குவரத்தும் திருப்பிவிடப்பட்டன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்