கந்தசஷ்டி விழா நிறைவு: முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்

கந்தசஷ்டி விழா நிறைவடைந்ததை தொடர்ந்து முருகன்கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

Update: 2020-11-22 09:52 GMT
புதுக்கோட்டை,

முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதைத்தொடர்ந்து முருகப்பெருமானின் திருக்கல்யாண நிகழ்ச்சி கோவில்களில் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டையில் அரியநாச்சியம்மன் கோவிலில் முருகப்பெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று இரவு 8.15 மணிக்கு மேல் நடந்தது. வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு யாகத் துடன் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் முருகப்பெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

கறம்பக்குடி

கறம்பக்குடி முருகன்கோவிலில் கந்தசஷ்டி விழாவின்இறுதி நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதைதொடர்ந்து வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி பட்டாடை உடுத்தி வெள்ளி கவசத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து கெட்டிமேளம் முழங்க பக்தர்களின் பக்தி கோஷத்துடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் கறம்பக்குடி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர் கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு கல்யாண விருந்து வழங்கப்பட்டது. விருந்து சாப்பிட்ட பக்தர்கள் மொய் பணம் வழங்கி சென்றனர்.

திருவரங்குளம்

திருவரங்குளம் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவில் சன்னதியில் உள்ள சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க யாக பூஜைகள் செய்து வைதிக முறைப்படி திருக்கல்யாணம் செய்து வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திருக்கல்யாணகோலத்தில் இருந்த முருகனை வழிபட்டனர்.

மேலும் செய்திகள்