முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீடு அட்டை வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்த ஆசாமி கைது

முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீடு அட்டை வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-11-22 12:49 GMT
சிங்கம்புணரி, 

சிங்கம்புணரி அருகே மூவன்பட்டியில் நேற்று காலை பொதுமக்களிடம் ஒருவர் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்து வாங்கி தருவதாக கூறி ரூ.100 முதல் ரூ.300 வரை வசூலித்து கொண்டிருந்தார். அவரை சுற்றி 50-க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்ப அட்டைகளுடன் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கல்லம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மெய்யப்பன் இது குறித்து சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரித்தார். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார்.

இதில் சந்தேகம் அடைந்த அவர் இது குறித்து சிங்கம்புணரி தாசில்தார் திருநாவுக்கரசுக்கு போனில் தகவல் தெரிவித்தார். உடனே அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் சம்பந்தப்பட்ட நபரிடம் இது குறித்து விசாரித்த போது அவர் போலியான நபர் என தெரிய வந்தது. முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீடு அட்டை வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்தது தெரிய வந்தது.

கைது

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அருண் சிங்கம்புணரி போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் அந்த நபரை கைது செய்தனர். கைதான நபர் சிங்கம்புணரி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த அழகு மகன் ரவி (வயது 40) என்பதும், போலியாக இ.சேவை முகவராக செயல்பட்டதும் தெரிய வந்தது. அவரிடம் இது போன்று வேறு எந்த ஊரிலும் பண வசூல் செய்து இருக்கிறாரா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்