ராமேசுவரம் கடற்கரையில் வாலிபர் குத்திக்கொலை தப்பிய கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டை

ராமேசுவரம் கடற்கரையில் வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட் டார். இதில் தொடர்புடைய கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

Update: 2020-11-22 13:30 GMT
ராமேசுவரம், 

ராமேசுவரம் அந்தோணியார் கோவில் கடற்கரை அருகே நேற்று கத்திக்குத்து காயங்களுடன் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதுகுறித்து அறிந்ததும் துறைமுக போலீஸ் இன்ஸ்பெக்டர் யமுனா, சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராம் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கடற்கரையில் அந்த நபர் மார்பில் கத்தியால் குத்தப்பட்டு கிடந்தார். அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட அந்த நபர் யார், என்பது குறித்து அறிய போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது அவர், ராமேசுவரம் சந்தன மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த அமீர்கான் மகன் மனோஜ் (வயது 23) என்பது தெரியவந்தது.

காரணம் என்ன?

கடற்கரையில் அவரை ஒரு கும்பலாக வந்து கத்தியால் குத்திவிட்டு தப்பினார்களா, அல்லது ஒருவர்தான் இந்த செயலில் ஈடுபட்டாரா? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் கொலையாளிகளை பிடிக்க ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின் பேரில் ராமேசுவரம் உதவி சூப்பிரண்டு தீபக் சிவாஜ் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. கடற்கரையில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்