வருகிற சட்டமன்ற தேர்தலில் “அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தோல்வி அடையும்” - முத்தரசன் பேட்டி

“வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தோல்வி அடையும்“ என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். இதுகுறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

Update: 2020-11-22 22:15 GMT
நெல்லை, 

சென்னை கலைவாணர் அரங்கம் அரசு கட்டிடம் ஆகும். அங்கு நடைபெற்ற அரசு விழாவில், பொது நிகழ்ச்சியில் அரசின் திட்டங்கள் குறித்து பேசுவதற்கு மாறாக, அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியை உறுதிப்படுத்துவது குறித்து மத்திய மந்திரி அமித்ஷா பேசி உள்ளார். அவர் மரபுகளை மீறி பேசி உள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் அரசியல் பேசி உள்ளனர்.

மத்திய மந்திரி அமித்ஷா அரசு செலவில் வந்து, அரசியல் பேசி விட்டு சென்றுள்ளார். எடப்பாடி பழனிசாமியும் மாவட்டம் தோறும் ஆய்வுக்கூட்டம் நடத்துவதாக கூறிச் சென்று அரசியல் பேசி வருகிறார். ஆனால் எதிர்க்கட்சியினர் அரசியல் பணியை மேற்கொண்டால் தடுக்கிறார்கள். இது ஜனநாயக விரோத செயல் ஆகும்.

அ.தி.மு.க. தொடர்ச்சியாக 2 முறை ஆட்சி அமைத்துள்ளது. 3-வது முறையாகவும் ஆட்சி அமைப்பது குறித்து கனவு காண்பதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு உரிமை உண்டு. ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி படுதோல்வி அடைந்தது. அந்த கூட்டணி வருகிற சட்டமன்ற தேர்தலிலும் தோல்வி அடையும்.

தேர்தல் கமிஷன் நடுநிலையான, சுதந்திரமான அமைப்பு ஆகும். ஆனால் அது மத்திய பா.ஜனதா அரசுக்கு கட்டுப்பட்ட அமைப்பாக செயல்பட்டு வருகிறது. பீகார் தேர்தலில் பா.ஜனதா பல்வேறு முறைகேடுகளை செய்து வெற்றி பெற்றுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலிலும் அதே நடைமுறையை கையாள முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் பா.ஜனதாவின் திட்டம் பலிக்காது. மேலும் முதியோர்கள் தபால் ஓட்டு அளிக்கலாம் என்று கூறி இருப்பது ஜனநாயகத்தின் உரிமையை பறிக்கும் செயல் ஆகும். தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. மாவட்ட செயலாளர் காசி விசுவநாதன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சடையப்பன் வரவேற்று பேசினார்.

மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். மாநில செயலாளர் முத்தரசன், மறைந்த தலைவர்களின் படங்களை திறந்து வைத்தார். பின்னர் மூத்த உறுப்பினர்களை கவுரவித்தார். பேச்சாளர் நெல்லை கண்ணன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நிஜாம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சுப்பையா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்