வேலூரில் பட்டப்பகலில் ஆற்காடு சாலையில் கால் மேல் கால் போட்டு படுத்திருந்த வாலிபர் - சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ

சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு வீடியோ சினிமா பிண்ணனி பாடலுடன் வேகமாக பகிரப்பட்டது.

Update: 2020-11-23 05:42 GMT
வேலூர், 

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களின் வாட்ஸ்-அப் குரூப் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு வீடியோ சினிமா பிண்ணனி பாடலுடன் வேகமாக பகிரப்பட்டது. அந்த வீடியோவில், வேலூர் மாநகரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஆற்காடு சாலையில் தனியார் மருத்துவமனை அருகே பட்டப்பகலில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் கால் மேல் கால் போட்டு கழுத்தின் கீழே கைவைத்து படுத்திருந்தார். அந்த சாலையில் சென்ற ஆட்டோ டிரைவர், இருசக்கர வாகன ஓட்டிகள் யாரும் அவரை எந்திரிக்க சொல்லவில்லை. மாறாக வாலிபரை கண்டு சிலஅடி தூரம் ஒதுங்கி சென்றனர். அந்த வாலிபர் கழுத்தின் கீழே கைவைத்து வானத்தை நோக்கி பார்த்தபடி படுக்கையறையில் உறங்குவதுபோன்று சாலையில் சந்தோஷமாக படுத்திருந்தார். சிலர் அவரை அங்கிருந்து செல்லும்படி கூறியும், அவர்களை வாலிபர் கண்டுகொள்ளவில்லை.

சிறிதுநேரத்தில் அங்கு வந்த தனியார் மருத்துவமனை காவலாளிகள், ஆட்டோ டிரைவர்கள் அந்த வாலிபரை எழுந்து செல்லும்படி எச்சரித்தனர். அதையடுத்து அவர் அங்கிருந்து செல்வார். இந்த காட்சியை செல்போனில் வீடியோவாக பதிவு செய்த நபர், கே.ஜி.எப். படத்தில் இடம் பெற்றுள்ள வீரா... வீரா... என்ற பின்னணி பாடலை அதனுடன் இணைந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், அந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், சில சமயங்களில் அவர் இவ்வாறு நடந்து கொள்ளுவார். அந்த வாலிபரை காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்