சரத்பவாரை தரக்குறைவாக பேசினேனா? பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் விளக்கம்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தரக்குறைவாக பேசியதாக கண்டனம் எழுந்தது. இதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2020-11-23 21:33 GMT
மும்பை, 

மராட்டிய பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் இடஒதுக்கீடு விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை கடுமையாக விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவார் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “சரத்பவார் மூத்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர். அவருக்கு எதிராக பேசுவது மாநில பா.ஜனதா தலைவருக்கு பொருத்தமானது அல்ல” என்றார்.

சந்திரகாந்த் பாட்டீல் விளக்கம்

இதற்கிடையே தான் சரத்பவாரை மரியாதை குறைவாக எதுவும் பேசவில்லை என சந்திரகாந்த் பாட்டீல் விளக்கம் அளித்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “கடந்த சனிக்கிழமை நடந்த பிற்படுத்தப்பட்ட சமூக தலைவர்கள் கூட்டத்தில், சில தலைவர்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இடையே வேறுபாட்டை உருவாக்க முயற்சி செய்கிறார்கள் என்றேன். இதில் தவறு எதுவும் இல்லை.

மேலும் அந்த நிகழ்ச்சியில், நான் அரசியலில் சேர்ந்த போது சில தலைவர்கள் மிகவும் உயர்வானர்கள் என நினைத்தேன். ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு அந்த தலைவர்களுக்கு போதிய அறிவு இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன் எனவும் கூறினேன். எனினும் சரத்பவாரை அவமதிக்கவில்லை” என்றார்.

மேலும் செய்திகள்