சட்டசபை, தலைமை செயலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதலை முறியடிப்பது குறித்து பாதுகாப்பு ஒத்திகை

புதுவை சட்டசபை மற்றும் தலைமை செயலகத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிப்பது தொடர்பாக பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.

Update: 2020-11-23 22:17 GMT
புதுச்சேரி, 

நாடு முழுவதும் சட்டசபை, தலைமைச் செயலகம் ஆகியவற்றில் பாதுகாப்பினை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அதை சமாளிப்பது எப்படி என்பது பற்றி ஆய்வு செய்ய தேசிய புலனாய்வு முகமையின் தென்மண்டல மேஜர் ராஜேஷ் தாக்கூர் தலைமையில் பாதுகாப்பு படையினர் புதுச்சேரிக்கு வந்தனர்.

சட்டசபை வளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதலை முறியடிப்பது தொடர்பாகவும், பாதுகாப்பு குறித்து சட்டசபை காவலர்கள் செயல்பட வேண்டிய விதம் குறித்தும் கமாண்டோ பயிற்சி முடித்த போலீசாருக்கு ஐ.ஆர்.பி. துணை கமாண்டன்ட் செந்தில்குமரன் பயிற்சி அளித்தார்.

இதையடுத்து புதுவை சட்டசபை மற்றும் தலைமை செயலகத்தில் நேற்று மாலை 6 மணி முதல் தீவிரவாதிகள் தாக்குதலை முறியடிப்பது தொடர்பாக பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

பிணைக் கைதிகள்

இதில் சட்டசபை மற்றும் தலைமை செயலகத்தில் தீவிரவாதிகள் நுழைந்து டம்மி வெடிகுண்டு வீசுதல், துப்பாக்கி சூடு ரப்பர் குண்டு மூலமாக தாக்குதல் நடத்தி அரசு அதிகாரிகள், பொதுமக்களை பிணைக் கைதிகளாக சிறைப்பிடித்து பணம் கேட்டு மிரட்டுதல் போன்று பாதுகாப்பு ஒத்திகை நடத்திக் காட்டினர்.

இதில் தேசிய புலனாய்வு முகமையின் பாதுகாப்பு படையினருடன் உள்ளூர் போலீசார், ஐ.ஆர்.பி.என். போலீசார், ஊர்காவல் படையினர், சட்டசபை காவலர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் மீட்பது போன்று ஒத்திகை நடந்தது.

இதன் காரணமாக சட்டசபை, தலைமை செயலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் யாரும் செல்லாதபடி பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் தீவிரவாதிகளில் தாக்குதலை சமாளிக்க நவீன பிரத்யேக வாகனங்களும் கொண்டு வரப்பட்டு இருந்தது. இந்த பாதுகாப்பு ஒத்திகை காரணமாக அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. 

மேலும் செய்திகள்