குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் பல லட்சம் மோசடி கவர்னர் கிரண்பெடியிடம் புகார்

குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் பல லட்சத்துக்கு மோசடி செய்து இருப்பதாக கவர்னரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-11-23 22:23 GMT
புதுச்சேரி, 

புதுவை பொதுப்பணித்துறை, பொது சுகாதார கோட்டத்தில் உள்ள குடிநீர் நிலையங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல முறைகேடுகள் நடப்பதாகவும், அரசுக்கு மிக சொற்ப அளவிலேயே கட்டணம் செலுத்துவதாகவும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அதாவது 2 தனியார் நிறுவனங்கள் 112 இடங்களில் செயல்பட்டு வருவதாகவும், 20 லிட்டர் தண்ணீருக்கு ரூ.7 வசூலிப்பதாகவும், அதில் 2.40 காசு மட்டுமே அரசுக்கு செலுத்துவதாகவும் தகவல் அளித்துள்ளனர். குறிப்பாக அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு செலுத்தியுள்ள தொகைகளை பார்க்கும்போது லட்சக்கணக்கில் வித்தியாசப்பட்டுள்ளது. அதிலும் கடந்த 2019-20-ம் ஆண்டிற்கு ரூ.76 லட்சத்து 35 ஆயிரத்து 507 செலுத்தியதாக அளித்த தகவலின்பேரில் ஒரு சென்டருக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 77 குடிநீர் கேன்கள்தான் விற்பனை செய்துள்ளதாக அரசுக்கு கட்டணம் செலுத்தியுள்ளது தெரியவருகிறது. இது மாபெரும் மோசடி ஆகும்.

ஆய்வு செய்ய குழு

ஒவ்வொரு சுத்திகரிப்பு நிலையத்திலும் குறைந்தபட்சம் 200-க்கும் மேற்பட்ட கேன்கள் விற்பனையாகும்போது இவர்கள் சொற்ப அளவிலேயே கேன்கள் விற்பனையாவதாக கூறியுள்ளது ஏற்புடையதல்ல. குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அனைத்திலும் பெரும்பாலும் மீட்டர்கள் பழுதடைந்துள்ளன. இதனை எந்த அதிகாரியும் ஆய்வு செய்வதில்லை. பொதுமக்களுக்கு இவர்கள் ரசீதும் கொடுப்பதில்லை.

இதனால் இவர்கள் கொடுப்பதுதான் கணக்கு என்ற நிலை உள்ளது. எனவே பொதுப்பணித்துறைக்கு ஆண்டிற்கு பல லட்சம் ரூபாய் வருமான இழப்பு ஏற்படுகிறது. இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தேவையான இடம், குடிநீர், மின்சாரம் ஆகியவற்றை அளித்துவிட்டு ஒரு கேனுக்கு ரூ.2.40 வசூலிப்பது மிகக்குறைந்த தொகையாகும். எனவே இந்த சுத்திகரிப்பு நிலையங்களை ஆய்வு செய்ய குழு அமைத்து இவர்களிடம் மாத கட்டணம் வசூலிக்கவும், ரூ.2.40 என்பதை கூடுதலாக வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்