தூத்துக்குடி அருகே ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், முள்ளக்காட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-11-24 17:10 GMT
ஸ்பிக்நகர், 

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு கோவளம் மீனவர் குடியிருப்பு பகுதியில் கடந்த 10 நாட்களாக மின்வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதை கண்டித்தும், உடனடியாக அந்த பகுதிக்கு மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், முள்ளக்காட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு புறநகர் பொருளாளர் செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பூமயில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி புறநகர் செயலாளர் ராஜா, சி.ஐ.டி.யு. சுப்பையா, மகாராஜன், டி.ஒய்.எப்.ஐ. ஆனந்த், மாதர் சங்க புறநகர் தலைவர் கவிதா, துணைச்செயலாளர் ஜெயக்குமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பகுதிக்கு உடனடியாக மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்