மரக்காணம் அருகே ஆய்வுக்கு சென்ற மாவட்ட கலெக்டரை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

மரக்காணம் அருகே புயல் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கு சென்ற கலெக்டரை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-11-24 23:00 GMT
மரக்காணம்,

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அழகன்குப்பம் மீனவர் கிராமத்தில் சுமார் 140 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதையொட்டி நேற்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை அதிகாரிகளுடன் அழகன்குப்பம் மீனவர் கிராமத்திற்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது கிராம மக்களிடம், பாதுகாப்பு மையத்தில் தங்கி இருக்க வேண்டும். மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

கிராம மக்கள் முற்றுகை

இதன்பின் எக்கியார்குப்பம், செட்டிக்குப்பம் உள்ளிட்ட மீனவர் கிராமங்களிலும் கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார். அப்போது மரக்காணம் அருகே முட்டுக்காடு காலனியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டரின் வாகனத்தை திடீரென்று வழிமறித்தனர். உடனே காரில் இருந்து இறங்கிய அவரை கிராம மக்கள் முற்றுகையிட்டு, தங்களது கிராமம் கடற்கரையையொட்டி இருப்பதால் புயல் தாக்கினால் அதிக சேதம் உண்டாகும். இதுவரை எங்களை பாதுகாக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி முறையிட்டனர்.

இதையடுத்து முட்டுக்காடு காலனிக்கு சென்று கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார். கிராம மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கவும், தேவையான உதவிகள் செய்யவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்பின் கலெக்டர் அண்ணாதுரை அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார்.

கலெக்டரை கிராம மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்