மருங்கூர் சுப்பிரமணியசாமிக்கு ஆறாட்டு விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

மருங்கூர் சுப்பிரமணியசாமிக்கு மயிலாடியில் ஆறாட்டு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2020-11-25 11:27 GMT
அஞ்சுகிராமம், 

மருங்கூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவில் கடந்த 20-ந் தேதி சூரசம்ஹாரம் நடந்தது. 10-வது நாளான நேற்று ஆறாட்டு விழா நடந்தது. இதையொட்டி நேற்று மாலையில் சுப்பிரமணியசாமி மருங்கூரில் இருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் மயிலாடிக்கு புறப்பட்டார்.

அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு நின்று சாமியை வழிபட்டனர். மயிலாடி புத்தனாறு கால்வாயை சென்றடைந்ததும் அங்குள்ள படித்துறையில் சாமிக்கு பால், இளநீர், பன்னீர், தேன், களபம் உள்பட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன.

ஆறாட்டு விழா

அதன்பின்பு சுப்பிரமணியசாமிக்கு புத்தனாறு கால்வாயில் ஆறாட்டு நிகழ்ச்சியை தந்திரிகள் நிறைவேற்றினர். அப்போது தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கால்வாய் தண்ணீருக்குள் இறங்கி நின்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தது.

ஆறாட்டு நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் படித்துறையை சுற்றிலும் கூடி நின்றனர். பின்னர் சாமி மீண்டும் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மருங்கூர் புறப்பட்டார்.

தளவாய்சுந்தரம்

விழாவில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் ஜெஸீம், அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவர் அழகேசன், மயிலாடி பேரூர் அ.தி.மு.க. செயலாளர் மனோகரன், மயிலாடி பேரூராட்சி முன்னாள் தலைவர் சாய்ராம், மயிலாடி பேரூர் பா.ஜனதா தலைவர் பாபு, ஆறாட்டு விழா கலை இலக்கிய பேரவை தலைவர் சுப்பிரமணியம், அ.தி.மு.க. பேரூர் செயலாளர்கள் சீனிவாசன், ராஜபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும், கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

மேலும் செய்திகள்