குண்டடம் அருகே உப்பாறு அணையில் குவிந்த வெளிநாட்டு பறவைகள் ஆர்வமுடன் பார்க்க படையெடுக்கும் பொதுமக்கள்

குண்டடம் அருகே உப்பாறு அணையில் வெளிநாட்டு அரிய வகை பறவைகள் குவிந்துள்ளன. இவ்வற்றை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்து செல்கின்றனர்.

Update: 2020-11-25 12:33 GMT
குண்டடம், 

அக்டோபர், நவம்பர் மாதங்களில் வெளிநாட்டு பறவைகள் தமிழகத்திற்கு வரும். காரணம் அப்போதுதான் குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பி இருக்கும். தற்போது தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. காட்டாற்று வெள்ளத்தால் குளம், குட்டைகள் நிரம்பி வருகிறது. இதையடுத்து வெளிநாட்டு பறவைகள் தமிழகத்திற்கு வருகை தர தொடங்கி உள்ளன. ஊத்துக்குளியை அடுத்த நஞ்ராயன் குளத்திற்கு ஏராளமான வெளிநாட்டு பறவைகள் கடந்த வாரம் வந்தன. தற்போது குண்டடம் அருகே உப்பாறு அணைக்கு ஐரோப்பாவை சேர்ந்த பறவைகள் வந்துள்ளன.

உப்பாறு அணை

இதுகுறித்து தாராபுரம் இயற்கை விவசாயி சதாசிவம் கூறியதாவது :-

உப்பாறு அணைக்கு ஆண்டுதோறும் கூழைக்கடா, நீலச்சிறகு வாத்து, முக்குளிப்பான், உப்புக்கொத்தி உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் வலசை வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஐரோப்பா மற்றும் அலாஸ்கா நாடுகளில் இருந்து பறவைகள் வந்துள்ளன. தற்போது அந்த நாடுகளில் உறை பனிநிலை கால நிலை நிலவுகிறது. எனவே அங்கு வாழும் பறவைகள் ஆப்பிரிக்காவை நோக்கி வலசை செல்லும் பறவைகளான செந்தொண்டை வயல், நெட்டைக்காலி பறவை, இஸ்பெலின் புதர்சிட்டு, ரைனெக்சாம்பல் தலை கூம்பலகான், நெடுங்கால் உள்ளான் போன்ற அரியவகை வெளிநாட்டு பறவைகள் முதன்முதலாக திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை அடுத்த உப்பாறு அணைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய வெளிநாட்டு பறவைகள் வருகை குறித்து தகவல் அறிந்து சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் புதிய வெளிநாட்டு பறவைகளை வந்து பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்