தனியார் நிதி நிறுவனம் நடத்தி ரூ.20 லட்சம் மோசடி செய்த மேலும் ஒருவர் கைது

நிதி நிறுவனம் நடத்தி ரூ.20 லட்சம் மோசடி செய்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-11-25 17:12 GMT
விழுப்புரம், 

கள்ளக்குறிச்சியில் தியாகதுருகம் செல்லும் பிரதான சாலையில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிதி நிறுவனத்தை அதே பகுதியை சேர்ந்த குழந்தைவேல், சம்சுதீன் மகள் ஜெயிலானி, செந்தில், குப்புசாமி மகள் அஞ்சலிதேவி ஆகிய 4 பேரும் நடத்தி வந்தனர். இவர்கள் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலித்தனர்.

ஆனால் பணம் செலுத்தியவர்களுக்கு வட்டியுடன் சேர்த்து தொகையை கொடுக்காமல் அவர்கள் 4 பேரும் ஏமாற்றியதோடு அந்த பணத்தின் மூலம் மேலும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தை ஆரம்பித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்தனர். பணம் செலுத்திய பொதுமக்கள், தாங்கள் செலுத்திய பணத்தை தரும்படி நெருக்கடி கொடுக்கவே அவர்கள் 4 பேரும், நிறுவனத்தை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள், விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் குழந்தைவேல் உள்ளிட்ட 4 பேர் மீதும் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் 4 பேரும் சேர்ந்து 100 பேரிடம் இருந்து ரூ.20 லட்சம் வரை பணம் பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

வாலிபர் கைது

இந்த மோசடியில் தொடர்புடைய குழந்தைவேலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் மற்ற 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இந்த சம்பவத்தில் தொடர்புடைய செந்தில் (வயது 30), விழுப்புரம் கே.கே.சாலையில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு கந்தன், இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் பிருந்தா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மகிபால், சீத்தாபதி ஆகியோர் கே.கே.சாலைக்கு விரைந்து சென்று செந்திலை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இந்த மோசடியில் தலைமறைவாக இருக்கும் ஜெயிலானி, அஞ்சலிதேவி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்