மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்களுடன் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஆலோசனை

மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

Update: 2020-11-25 22:57 GMT
மாமல்லபுரம், 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரியில் புயல், மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்ட படுக்கை வசதி, மருத்துவ உபகரணங்கள், மருந்து மாத்திரைகள் இருப்பு, அவசர தேவைக்கு ஆன்புலன்ஸ் வசதி உள்ளிட்ட வசதிகள் குறித்து டாக்டர்களுடன் தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் புயல், மழையால் உடல்நிலை பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது.

புயல் பாதிப்புக்கு உள்ளாகும் கடலூர், விழுப்புரம், நாகை, செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவடடங்களில் சுகாதாரத்துறை முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து தயார் நிலையில் உள்ளது. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்படும் மக்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல பல்வேறு இடங்களில் 465 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் உள்ளன.

வாகனங்களுடன் கூடிய மருத்துவ குழுவும் ஆங்காங்கு டாக்டர்களுடன் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மழை கடுமையாக பெய்து வருவதால் பொதுமக்கள் வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசைகளில் வசிக்கும் மக்கள் அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ள பாதுகாப்பான இடங்களில் சென்று தங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கொக்கிலமேடு, தேவநேரி ஆகிய பகுதிகளுக்கு சென்று சுகாதார பணிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். அவருடன் மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக்குழும உறுப்பினர் ஏ.கணேசன், செங்கல்பட்டு மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஆறுமுகம், திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் மாமல்லபுரம் ஜி.ராகவன் உள்ளிட்ட பலா் வந்திருந்தனர்.

மேலும் மாமல்லபுரத்தில் நேற்று பலத்த மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வரத்தின்றி காணப்பட்டது. சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

மேலும் செய்திகள்