காளையார்கோவில், கல்லல் பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

காளையார்கோவில் மற்றும் கல்லல் ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2020-11-26 05:15 GMT
காளையார்கோவில்,

காளையார்கோவில் மற்றும் கல்லல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் மற்றும் பாசன கண்மாய்களை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் காஞ்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஒருப்போக்கி கிராமத்தில் உள்ள பாசன கண்மாயில் தண்ணீர் முழு அளவு நிரம்பிய நிலையில் அதன் கரை பகுதிகளில் உள்ள மரம் சாய்ந்ததால் அந்த பகுதியில் இருந்து கண்மாயை ஒட்டி உள்ள வீடுகளுக்கு தண்ணீர் வந்தது.

இதையடுத்து ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அந்த கரையை பலப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். அவர்களிடம் கலெக்டர் பாசன கண்மாய்களை ஆய்வு செய்து சரியாக உள்ளதா? என முன் கூட்டியே உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து மறவமங்கலம் பெரியகண்மாய்க்கு வரத்து கால்வாய் மூலம் வரும் மழைநீரை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு விவசாயிகளுக்கு தேவையான அளவு தண்ணீர் தேக்கி வைக்கும் வகையில் கண்மாயை பலப்படுத்த வேண்டும் என்றார். பின்னர் மறவமங்கலம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கும் பணி மற்றும் சாலைகள் சீரமைப்பு பணிகளை அவர் பார்வையிட்டார்.

பின்னர் கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விசாலையன்கோட்டை ஊராட்சியில் உள்ள பாசன கண்மாயை பார்வையிட்ட கலெக்டர் அங்குள்ள கண்மாய் பகுதியில் போதிய அளவு தண்ணீர் தேங்கி உபரி நீர் வெளியேறும் வகையில் மணல் மூடைகளை வைத்து கண்காணிக்க வேண்டும் என்றும், சேதமடைந்த பகுதிகளை உடனுக்குடன் சரிசெய்து கண்மாயில் தண்ணீரை சேமிக்கும் வகையில் அதன் கரைகளை பலப்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மண்டைக்காடு ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள விளைநிலங்கள் சீரமைத்தல் மற்றும் பசுமை வீடு கட்டும் பணிகள், தனிநபர் கழிப்பறைகள் கட்டும் பணி ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், ஊரக வளர்ச்சி முகமை பொறியாளர் முருகன், சருகனியாறு வடிநிலக்கோட்ட உதவி செயற்பொறியாளர் மலர்விழி, உதவி பொறியாளர்கள் கண்ணன், முத்துராமலிங்கம், தாசில்தார் ஜெயநிர்மலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ, உமாமகேஸ்வரி, மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், முன்னோடி விவசாயி சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்