அரசின் துரித நடவடிக்கையால் நிவர் புயலால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை - முதலமைச்சர் பழனிசாமி பேட்டி

அரசின் துரித நடவடிக்கையால் நிவர் புயலால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

Update: 2020-11-26 12:56 GMT
கடலூர்,

கடலூரில் நிவர் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்த பின் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் நெல்,கரும்பு வாழை பயிர்கள் புயலால் அதிகளவில் சேதமடைந்துள்ளன. கடலூர் மாவட்டத்தில் பயிர்சேதம் பற்றி முழுமையாக கணகெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் 315 ஹெக்டேர் நிலக்கடலை, 35 ஹெக்டர் வாழை, 8 ஹெக்டர் மரவள்ளிக்கிழங்கு.1,617 ஹெக்டர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சரியாக எடுத்ததால் புயலால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

கடலூரில் புயலால் சாய்ந்த 77 மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடலூர் மாவட்டத்தில் புயலால் விழுந்த 321 மரங்கள் அகற்றப்பட்டு விட்டன.

நிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் அதிகபாதிப்பு ஏற்படும் என வானிலை மையம் கூறியிருந்தது. அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்த நடவடிக்கைகளால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்களுக்கும் முழுமையான அறிவுரை வழங்கப்பட்டது.

புயல்பாதிப்பை தடுக்க அரசு அறிவுறுத்தலின்படி, இரவு பகல் பாராமல் பணியாற்றிய அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினருக்கு பாராட்டுகள். 

புயல்காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே மின்சாரம் நிறுத்தப்பட்டது. உயிரிழப்பு ஏற்படுவதைத்தடுக்க மழைநீர் முழுவதும் அகற்றப்பட்ட பிறகே மின்விநியோகம் வழங்கப்படும்.

சுமார் 2.3 லட்சம் பேர் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடலூரில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு இருந்தால் அதை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். பயீர்க்காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும். சேதமடைந்த பயிர்களுக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்