வள்ளியூர் அருகே துணிகரம்: மளிகை கடைக்காரர் வீட்டில் 44 பவுன் நகை கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

வள்ளியூர் அருகே மளிகை கடைக்காரர் வீட்டில் 44 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-11-27 22:00 GMT
வள்ளியூர், 

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிக்குளம் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் ஜான் மைக்கேல். இவர் மும்பையில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி எஸ்கலின் அனிதா.

ஜான் மைக்கேல் தன்னுடைய குடும்பத்தினருடன் மும்பையில் வசித்து வருகிறார். எனவே, தெற்கு கள்ளிக்குளத்தில் உள்ள அவரது வீட்டை மாமியரான சேவியர் சரோஜா பராமரித்து வருகிறார்.

சேவியர் சரோஜா கடந்த 4 நாட்களுக்கு முன்பு விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் ஜான் மைக்கேலின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் அங்கு திருட திட்டமிட்டனர்.

அதன்படி, கடந்த 25-ந்தேதி நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், ஜான் மைக்கேல் வீட்டின் காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். தொடர்ந்து வீட்டில் இருந்த பீரோவை உடைத்து திறந்து அதில் இருந்த 44 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

நேற்று முன்தினம் மாலையில் ஜான் மைக்கேலின் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, சேவியர் சரோஜாவுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் விரைந்து வந்து தனது மருமகனின் வீட்டை பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 44 பவுன் நகைகள் கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து வள்ளியூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர்.

போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு, தெரு வழியாக மெயின் ரோடு வரையிலும் ஓடியது. ஆனாலும் அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இந்த துணிகர கொள்ளை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிப்பதற்காக போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்