கோவாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இளம்பெண்ணுடன் இந்தி பாடலுக்கு நடனமாடிய சங்கமேஷ்வர் எம்.எல்.ஏ. சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

கோவாவில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், இளம்பெண்ணுடன் இணைந்து இந்தி பாடலுக்கு சங்கமேஷ்வர் எம்.எல்.ஏ. நடனம் ஆடிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

Update: 2020-11-27 23:00 GMT
பெங்களூரு, 

பெலகாவி புறநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் லட்சுமி ஹெப்பால்கர். இதுபோல சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சங்கமேஷ்வர். இந்த நிலையில் லட்சுமி ஹெப்பால்கர் மகன் மிருனாலுக்கும், சங்கமேஷ்வரின் அண்ணன் மகள் ஹிதாவுக்கும் திருமணம் செய்ய கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களின் திருமணம் நவம்பர் 27-ந் தேதி (நேற்று) நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று காலை கோவாவில் வைத்து திருமணம் நடந்தது. பின்னர் கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இதில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே, எம்.எல்.ஏ.க்கள் அஞ்சலி நிம்பால்கர், பிரியங்க் கார்கே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு புதுமண தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு அந்த நட்சத்திர ஓட்டலில் வைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. ஆட்டம், பாட்டத்துடன் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆடி, பாடி மகிழ்ந்தனர். அப்போது அங்கு ஒலிக்கப்பட்ட ஒரு இந்தி பாடலுக்கு ஒரு இளம்பெண்ணுடன் சேர்ந்து பலரும் நடனமாடினர். அப்போது அங்கு வந்த சங்கமேஷ்வர் எம்.எல்.ஏ.வும், இளம்பெண்ணுடன் இணைந்து பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

மேலும் செய்திகள்