சிவகங்கையில் 4 மணி நேரம் பலத்த மழை; கண்மாய்கள் நிரம்பின - வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி

சிவகங்கை நகரில் 4 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் கண்மாய்கள் நிரம்பின. தாழ்வான இடங்களில் வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

Update: 2020-11-28 07:15 GMT
சிவகங்கை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. சிவகங்கை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தூறலுடன் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு சிவகங்கை நகரில் தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இந்த மழை நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது. சுமார் 4 மணி நேரம் பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக சிவன் கோவில் பகுதி, பஸ் நிலைய பகுதி, காந்தி வீதி, புதுத்தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி நின்றது. மேலும் பல இடங்களில் சாக்கடை நீருடன் மழைநீர் கலந்து ரோடுகளில் வெள்ளம் போல் ஓடியது.

சிவகங்கை மதுரைமுக்கு பகுதியை அடுத்துள்ள காளவாசல் பகுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் காளவாசல் பகுதியில் உள்ள வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்தது. பல்வேறு வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்து வீடுகளில் இருந்து மழைநீரை வெளியேற்றினார்கள்.

இதுதவிர சிவகங்கை மீனாட்சி நகரில் உள்ள சாஸ்திரி தெரு பகுதிகளில் பாதாள சாக்கடை செயல்படாததால் மழைநீர், கழிவுநீருடன் சேர்ந்து தேங்கியது. வீடுகளின் முன்பு கழிவுநீர் தேங்கி நின்றது. அங்கு கடும் துர்நாற்றம் ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நகரசபை ஆணையாளர் ராஜேஸ்வரன், சுகாதாதார ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். பாதாள சாக்கடை தொட்டிகளில் தேங்கிய தண்ணீரை லாரிகளின் மூலம் அப்புறப்படுத்தினார்கள். மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். அப்போது அந்த பகுதி மக்கள், பாதாள சாக்கடை கால்வாய் பிரச்சினை குறித்து பலமுறை மனு கொடுத்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. காலி இடத்தில் முட்புதர்கள் சூழ்ந்து இருப்பதால் மழைக்காலங்களில் விஷ பூச்சிகள் தொந்தரவு இருப்பதாகவும், அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனர்.

இதை தொடர்ந்து கலெக்டர், நகராட்சி ஆணையாளரை அழைத்து, காலி இடத்தில் வளர்ந்து உள்ள முட்புதர்களை அகற்ற உத்தரவிட்டார். அத்துடன் பாதாள சாக்கடை தொட்டியில் தேங்கும் கழிவுநீரை உடனுக்கு உடன் அகற்றவும் உத்தரவு பிறப்பித்தார்.

சிவகங்கை நகரில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் வாணியன்குடி கண்மாய் உள்பட சிவகங்கை ஊராட்சி ஒன்றிய பகுதியில் 4 கண்மாய்கள் நிரம்பின.இதை தொடர்ந்து ஆணையாளர் பழனியம்மாள் உத்தரவின் பேரில் பொறியாளர் ராஜா மற்றும் யூனியன் அதிகாரிகள் சென்று கண்மாய்கள் உடைப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டனர். காரைக்குடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக செஞ்சை நாட்டார் கண்மாய் நிரம்பி மறுகால் சென்றது. கண்மாய்கள் நிரம்பியதால் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

நேற்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் பதிவான மழையளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

சிவகங்கை 59.6, மானாமதுரை 21, திருப்புவனம் 86.4, தேவகோட்டை 74.2, காரைக்குடி 49, திருப்பத்தூர் 39, காளையார்கோவில் 137.2, சிங்கம்புணரி 65.4. மாவட்டத்தில் அதிக அளவாக காளையார்கோவிலில் 137.2 மில்லி மீட்டரும், குறைந்த அளவாக மானாமதுரையில் 21 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.

தேவகோட்டை அருகே திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த சாலை தச்சவயல் கிராமத்தின் வழியாக செல்கிறது.

மேலும் தேவகோட்டை- சிவகங்கை சாலை குறுக்கே செல்வதால் அந்த சாலையின் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது நிவர் புயல் காரணமாக நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை தேவகோட்டை மற்றும் சுற்றி உள்ள கிராமங்களில் பெய்தது. இதனால் தச்சவயல் கிராமத்தில் மழைநீர் வீடுகளுக்குள்ளே புகுந்தது.

மேம்பாலம் பணி நடைபெற்று வருவதாலும் வடிகால் செல்ல தடைபட்டதாலும் மழைநீர் கிராமங்களுக்குள் புகுந்தது. இதனால் சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் சென்றது. கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

காரைக்குடி செஞ்சை பகுதியில் உள்ள யாகு என்பவரது உரக்கடைக்குள் மழைநீர் புகுந்தது. கடைக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் அவர் ஈடுபட்டார்.

மேலும் செய்திகள்