தாராவியில் பரிதாபம் லிப்டில் சிக்கி சிறுவன் பலி

தாராவியில் லிப்டில் சிக்கி 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Update: 2020-11-29 00:00 GMT
மும்பை,

மும்பை தாராவி கிராஸ்ரோடு பால்வாடி பகுதியில் கோஷிசெல்டர் என்ற 7 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் வசித்து வருபவர் ஜோரா பிபி. இவரது 4 வயது மகன் முகமது ஹூசைபா சேக். சிறுவன் சேக் எப்போதும் துருதுருவென விளையாடி கொண்டு இருப்பான்.

இவன் நேற்று மதியம் விளையாடுவதற்காக கட்டிடத்தின் தரை தளத்திற்கு தனது அக்காள் மற்றும் பக்கத்துவீட்டு சிறுவனுடன் வந்தான். இவன் விளையாடி முடித்துவிட்டு மதியம் 12.45 மணியளவில் 4-வது மாடிக்கு லிப்டில் சென்றான்.

4-வது மாடி வந்தவுடன் அக்காள் மற்றும் மற்றொரு சிறுவன் லிப்டை விட்டு வெளியே சென்றுவிட்டனர். ஆனால் சிறுவன் சேக் மட்டும் லிப்ட் உள்புறம், வெளிபுற கதவுகளுக்கு இடையே நின்று கொண்டு இருந்தான். இதில் சிறுவன் லிப்ட் கதவை பூட்டிவிட்டு வெளியே செல்வதற்கு முன், வெளிப்புற கதவும் பூட்டியது. இதனால் அவன் லிப்டின் 2 கதவுகளுக்கு இடையே மாட்டிக்கொண்டான்.

இந்தநிலையில் கதவுகள் மூடப்பட்டதால் லிப்ட் மேல் நோக்கி செல்லத்தொடங்கியது. இதனால் கதவுகளுக்கு இடையே சிக்கியிருந்த சிறுவன் லிப்டுக்கும், மாடி சுவருக்கு இடையே நசுங்கினான். பின்னர் அவன் லிப்ட், சுவர் இடைவெளி வழியாக கீழே விழுந்தான். இந்த நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் லிப்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதற்கிடையே வெளியே நின்ற சிறுவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு குடியிருப்புவாசிகள் ஓடிவந்தனர். ஆனால் லிப்டில் சிக்கிய சிறுவனை அவர்களால் மீட்க முடியவில்லை.

இந்தநிலையில் தகவல் அறிந்து தீயணைப்பு படையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி சிறுவனை மீட்டனர். ஆனால் அப்போது சிறுவன் உயிரிழந்தது தொியவந்தது.

இதையடுத்து போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சாகுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் லிப்டில் சிக்கி பலியான சம்பவம் தாராவி பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்