குமரி மீனவர்கள் 2-ந் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் கலெக்டர் அரவிந்த் எச்சரிக்கை

வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடற்கரை பகுதியில் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே குமரி மீனவர்கள் வருகிற 2-ந் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கலெக்டர் அரவிந்த் அறிவித்துள்ளார்.

Update: 2020-11-29 03:48 GMT
நாகர்கோவில்,

தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேலும், வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு திசையில் நகர்ந்து வருகிற 2-ந் தேதி தென் தமிழகத்தை நோக்கி நகரக்கூடும்.

இதனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை (திங்கட்கிழமை) தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றும் வீசக்கூடும். மேலும் டிசம்பர் 1-ந் தேதி தென்தமிழகத்தில், தென் மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னார்வளைகுடா பகுதிகள், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று மற்றும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. டிசம்பர் 2-ந் தேதி தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் 50 முதல் 60 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

மீன்பிடிக்க செல்ல வேண்டாம்

எனவே, குமரி மாவட்ட மீனவர்கள் டிசம்பர் 2-ந் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். தற்போது மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் நாளைக்குள் கரை திரும்புமாறும் கேட்டுக்கொள்ள படுகிறார்கள். மேலும், மீனவர்கள் தங்களது மீன்பிடிபடகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தேங்காப்பட்டணம், மீன்பிடி துறைமுக ஆய்வாளர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மீனவ சங்க பிரதிநிதிகள், மீனவர்கள், மீன்வளத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் கலெக்டர் அரவிந்த் பேசும் போது, புயல் எச்சரிக்கை குறித்து கடலுக்கு சென்றுள்ள மீனவர்களுக்கு உரிய தகவல் தெரிவிக்க வேண்டும். கடலுக்கு சென்றுள்ள படகுகள் குறித்து விபரங்கள் சேகரிக்க வேண்டும். வருகிற 2-ந் தேதி வரை புதிதாக யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கூறினார்.

மேலும் செய்திகள்