அதியமான்கோட்டை அருகே கார் மரத்தில் மோதி என்ஜினீயரிங் மாணவர் சாவு பெற்றோர் படுகாயம்

அதியமான்கோட்டை அருகே கார் மரத்தில் மோதி என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய பெற்றோர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2020-11-29 03:56 GMT
நல்லம்பள்ளி,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை கள்ளியம்புதூரை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 48). அரிசி வியாபாரி. இவருடைய மனைவி தெய்வம் (45). இவர்களது மகன் சுகாஷ் (21). இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். இவர்கள் 3 பேரும் காளஹஸ்தி கோவிலுக்கு செல்ல காரில் நேற்று புறப்பட்டனர். காரை சந்திரசேகர் ஓட்டி வந்தார். தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே ஜீவா நகர் பகுதியில் பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென கார் சாலையின் தடுப்பு சுவரில் மோதி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இதில் சுகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சந்திரசேகர், தெய்வம் ஆகிய 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அதியமான்கோட்டை போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

தொடர்ந்து போலீசார், விபத்தில் உயிரிழந்த மாணவர் சுகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்றபோது மரத்தில் கார் மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்